திரு.சின்னப்ப தேவரின் முருக பக்திக்கு ஒரு அணிகலனாக திரு. கண்ணதாசன் எழுத்தில், திரு.மதுரை சோமுவின் குரலில், வயலின் வித்தகர் குன்னக்குடியின் இசையில் அமைந்த இந்தப் பாடல் மருதமலை முருகனை கண்ணெதிரே காணும் அனுபவத்தை கேட்போருக்கு அளிக்கிறதென்றால் மிகையன்று. அற்புதமான வரிகள், அபூர்வமான ஸ்வர பிரஸ்தாரங்களுடன் அமைந்து எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடலாகத் தோன்றுகிறது.
" கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்கு மணி நாட்டினிலே புனித மலை எந்த மலை? தேடி வந்தோர் இல்லம் எல்லாம் செழிக்கும் மலை எந்த மலை தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை. "
என்று அற்புதமாகத் துவங்கும் பாடல் தொடர்ந்து
' மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலைய்யா அய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா உனது மனம் பெற மகிழ்ந்திடவே '
என ஆற்றொழுக்காகத் தொடர்கிறது.
இந்தப்பாடலின் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. ஒருமுறை 1972ஆம் ஆண்டில் கவியரசு கண்ணதாசனின் மகளின் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்பொழுது தமக்கு வர வேண்டிய இடத்திலிருந்து பணம் வராமல் போனதினால் கவிஞர் துயருற்றிருந்தாராம். கவிஞரின் இஷ்ட தெய்வம் கண்ணன். அவ்வமயம் தேவரின் ' தெய்வம் ' படத்திற்கு பாடல் எழுதக் கடமையே கண்ணாக கவிஞர் தன் உதவியாளரிடம் இப்பாடலின் வரிகளைச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது அடுத்த அறையிலிருந்த தேவர் விரைந்து வந்து அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை திருப்பிச் சொல்லுமாறு கேட்டு அப்பாடல் தமக்கென்றே எழுதப்பட்டதாக எண்ணி மகிழ்ந்து உடனே ஒரு லக்ஷ ரூபாய்கள் கவிஞருக்கு அளித்தது மட்டுமின்றி தமக்குரிய திருமண மண்டபத்தில கவிஞரின் மகளின் திருமணத்தை நடத்தச் செய்தாராம். அந்த ' காலத்தால் செய்த உதவி ' கவியரசிற்கு ' ஞாலத்தில் மாணப் பெரிதாக' க் கண்டதில் வியப்பதற்கேதுமில்லை.
தேவரின் திரைப்பட அரங்கில் கவியரசரும், வித்தகரும் ஒரு நட்போடு கூடிய வாக்கு வாதத்தில் தத்தம் திறமையை நிலை நிறுத்தும் சவாலில் ஈடுபட்டிருந்தபொழுது குன்னக்குடி தம் நண்பரின் திறமைக்குச் சவாலாகக் கடினமான சங்கதிகளுடன் கூடிய விரைவு ஸ்வரங்களை அமைத்து வாசித்த பல்லவி அனுபல்லவி சரணத்திற்கு சற்றும் சளைக்காது சாஹித்யத்தை உடனுக்குடன் எழுதி நண்பர்கள் ஆறத் தழுவிக் கொண்டனராம். இப்பாடலுக்கு பின் அமைந்துள்ள கதையும் சுவையாக இருக்கிறதல்லவா? அடுத்து வரும் பாடல் வரிகளையும் சுவைத்து இன்புறலாமே.
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தையா(மருதமலை) கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் .நிலை மாறி ஆறுதல் உருவாக எழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஆஆ (மருதமலை)
தொடர்ந்து துரிதகதியில் பாடல் அற்புதமாகத் தொடர்கிறது.
சக்தித்திருமகன் முத்துக் குமரனை மறவேன் நான் மறவேன்பக்திக்கடலென பற்றித் தணிந்திட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ் மகனே காண்பதெல்லாம் உனது முகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனது பலம் உறு துணை முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலைய்யா.(மருதமலை)
என்ன நிலா அன்பர்களே, இப்பாடல்
' உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே '
என்ற திருப்புகழ் சாரத்துடன் மார்பில் சந்தனம் அணிந்து ,நெற்றியில் குங்குமம் துலங்கக் காட்சியளிக்கும் தேவர் அவர்களையும் நினைவுறுத்துகிறதன்றோ?