Monday, September 03, 2007

கறுப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ மாணவ- மாணவிகள் போராட்டம்:


கிராமங்களில் டாக்டர்கள் கட்டாய நியமனத்தை எதிர்த்து மருத்துவ மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ படிப்பை முடிக்கும் டாக்டர்கள் கிராமங்களில் கண்டிப்பாக ஒரு வருடம் பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் எம்.பி.பி.எஸ். படிப்பு காலம் 5 வருடங்களில் இருந்து 6 வருடமாகவும் உயர்த்தப்படுகிறது.
இதற்கு மருத்துவ மாணவர்களும் டாக்டர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து இன்று வகுப்புக்கு சென்றனர். பிற மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவ- மாணவிகள் திரண்டு மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
கிராமம் என்றால் குக்கிராமம் கிடையாது 4 மாதம் ஆரம்ப சுகாதார மையத்திலும் 4 மாதம் வட்டார ஆஸ்பத்திரியிலும் 4 மாதம் மாவட்ட ஆஸ்பத்திரியிலும் பணியாற்ற வேண்டும் இதற்காக அவர் களுக்கு ரூ.8 ஆயிரம் முதல் சம்பளம் வழங்குகிறோம் என்று மத்திய மந்திரி அன்புமணி கூறி இருந்தார். போராட்டம் வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து போராட்டத்தில் இன்று ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கட்டாய கிராமப்புற சேவை என்ற பெயரில் இளம் மருத்துவர் வேலை வாய்ப்பை பறிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மருத்துவ படிப்பு காலத்தை 5 வருடத்தில் இருந்து 6 வருடமாக உயர்த்தினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களும் பெண்களும் மருத்துவம் பயில தயங்குவர். இது சமூக அநீதியாகும்.
டாக்டர்கள் குக்கிரா மங்களிலும் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நிரந்தர டாக்டர்களாக நியமிக்க வேண்டும்.
தொகுப்பு ஊதியத்திலும் ஒப்பந்த அடிப்படையிலும் கட்டாய சேவை என்ற பெயரி லும் டாக்டர்கள் நியமிக்கப்படுவதை கைவிட வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் கடை பிடித்த வேலை நியமன தடை உத்தரவே நீண்ட காலமாக மருத்துவ பணியிடங்கள் இந்தியா முழுவதிலும் காலியாக இருப்பதற்கு காரணம். தமிழக அரசு இந்த தடை உத்தரவை திரும்ப பெற்ற போதிலும் மத்திய அரசு இன்னும் திரும்ப பெறவில்லை.
எனவே மருத்துவர்கள் வேலை நியமனங்களை ஆண்டு தோறும் நடத்தி காலியிடங்களை நிரப்ப வேண்டும் அதற்கு மாறாக கட்டாய சேவை என்ற பெயரில் வேலை வாய்ப்பற்றதாக மருத்துவ துறையை உருவாக்குவதை கைவிட வேண்டும்.
டாக்டர்கள் ஊதியத்தை 3 மடங்காக உயர்த்த வேண்டும் முதுகலை படிப்பு இடங்களை அதிகபடுத்தி அனுபவம் பெற்ற டாக்டர்களை கிராமங்களில் பணியமர்த்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் வருகிற 5-ந்தேதி வகுப்புகளை புறக்கணிப்பார்கள். பயிற்சி மருத்துவர்கள் வேலை
நிறுத்தம் செய்வார்கள்.

No comments: